Tuesday, October 23, 2018

அன்னாபிஷேகம் ஸ்பெஷல் ! 23.10.18 செவ்வாய்கிழமை

அன்னாபிஷேகம் ஸ்பெஷல் !

24.10.18 புதன்கிழமை

ஐப்பசி பௌர்ணமி - ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம்,
அஹமன்னம், அஹமன்னதோ” என்று
கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 அமுது படைக்கும்அந்தஆண்டவனுக்கே அமுதுபடைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

ஆகமத்தில் அன்னாபிஷேகம் :

 ஆலயவழிபாட்டில்பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்க  உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரியஅன்னத்தால் வழிபடுவது சிறப்பானது.அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே? ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.

அது என்ன சாபம்?தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.

கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து நடைமுறைப்படுத்தினார்கள்.

 முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினல் குளிர்வது இயற்கைதானே.

அன்னத்தின் சிறப்பு :

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம்
ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள்
என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது..

சிவபுராணத்தில் உள்ள ஒரு கதை உணவின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டார்களா தெரியவில்லையே எனச் சந்தேகம் எழுப்பினாராம் பார்வதி தேவி சிவபிரானிடம். அனைவரும் இன்றைய பொழுதில் உணவு உண்டாகிவிட்டது என்று பதில் கூறினாராம் சிவன். இங்கே, கைலாயத்தில் என்னுடனேயே தங்கி இருக்கும்போது, இது தங்களுக்கு எப்படித் தெரியும் என்று தேவி கேட்க, யாம் அனைத்தையும் அறிவோம் என்கிறார் சிவன். இதனைச் சோதிக்கப் பார்வதி தேவி முடிவு செய்கிறார். மறுநாள் சிறிய தங்கச் சம்படத்தில் எறும்பு ஒன்றைப் போட்டு அடைத்துவைத்தாள் தேவி. பின்னர் மதிய வேளையின்பொழுது, அனைவருக்கும் உணவு கிடைத்ததா என்று தேவி கேட்க, என்ன இது தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாய், அனைவரும் உண்டார்கள் என்று பதிலிறுத்தார் சிவன். தன் புடவைத் தலைப்பில் சம்படத்தை முடிந்து வைத்திருந்த தேவி, அதனை எடுத்துத் திறந்தபடியே, இதில் இருக்கும் எறும்பும் சாப்பிட்டதா என்று கூறியபடியே அப்பாத்திரத்தினுள் பார்க்க, அதில் இருந்த அரிசியை எறும்பு உண்டுகொண்டிருந்தது. திகைத்தாள் பார்வதி. கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் சிவன்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் மூலவராகச் சுமார் பதிமூன்று அடி உயரமும், அறுபத்து மூன்று அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லிலான மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை முழ்கடிக்கும் அளவிற்குச் சுமார் நூறு மூட்டை அரிசியில் அன்னம் செய்து, அதனை அன்னாபிஷேகமாகச் செய்வது வழக்கம்.

அன்னாபிஷேகம் செய்யும் முறை:

ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது.

சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.

இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவரூபமாக இருப்பதாகப் பேரூர் புராணம் தெரிவிக்கிறது.
லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!

நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு
தடையின்றிக் கிடைக்கும் என்பதை
இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.
அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது. நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.
வெள்ளை அன்னம் சாப்பிடக் கூடாது என்பதால்,               பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னம்  சாம்பார், தயிர், மோர் ஆகியவற்றுடன் தனித்தனியே கலக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் .இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.

அன்னாபிஷேகப் பலன்கள்:

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அது பொதுவாக, எந்த வேலையும் செய்யாமல் ஓசிச் சோறு உண்டு வெட்டியாக காலம் கழிப்பவரைக் குறித்துச் சொல்லப்படுவதாக இருக்கிறது. ஆனால் உண்மைப் பொருள் அதுவல்ல. சோறாகிய அன்னத்தை அதாவது அன்னாபிஷேகத்தைக் கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே காலப் போக்கில் இவ்வாறு மாறிவிட்டது.

வியாபாரத்தில் பிரச்னை இருப்பவர்களும், நஷ்டமடைந்தவர்களும் அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் நிமிரும். பள்ளிக் குழந்தைகளுக்கும் ஏற்றது இது. சில குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். ஆனால் தேர்வு நேரத்தில் எல்லாம் மறந்து போகும். அந்தக் குழந்தைகள் அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் எல்லாம் நன்றாக நினைவில் நிற்கும்.

வீட்டில் லிங்கம் வைத்திருந்தும் நித்ய வழிபாடுகள் செய்யாதவர்கள் இல்லை செய்ய இயலாதவர்கள் வருடத்தில் ஒரு நாள் அன்னாபிஷேக தரிசனம் செய்து பிரசாதம் உண்டு, சிவபூஜை செய்யாததால் ஏற்படும் தோஷத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

நீண்ட நாடளாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும்.
பொதுவில் சிவப் பிரசாத அன்னத்தை உண்போர்க்கு என்றைக்குமே உணவுக்கு தட்டுப்பாடு என்பதே வராது. வீட்டில் எப்போதும் தானியங்கள் மிகுந்து இருக்கும்.

அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் தோற்றப் பொலிவும், தன் நம்பிக்கையும் கை வரப் பெறும். அன்னாபிஷேகம் குறைவின்றி நடந்தால் அந்த வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அன்னாபிஷேகம் என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது. பாரம்பரியச் சிறப்புடையது என்பது நன்று விளங்குகிறது.!

🐜🐜சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான தவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த
சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் (வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் ) கண்டு தரிசித்து,ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.

திருச்சிற்றம்பலம் !!!

Sunday, October 21, 2018

பள்ளியறை பூஜையின் மகத்துவங்களை அறிவோம்!!!21/10/2018ஞாயிறு

பள்ளியறை பூஜையின் மகத்துவங்களை அறிவோம்!!

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்திலும் ஊடுருவி நிற்பது சதாசிவம் என்ற அருணாச்சலேஸ்வரரே!

20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் சிவலிங்க வழிபாடு இருந்து வந்தது;தற்போது நமது பாரத நாடு,ஸ்ரீலங்கா,மலேஷியா,சிங்கப்பூர்,நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளில் மட்டும் வழக்கத்தில் இருக்கின்றது;தாய்லாந்து,வியட்நாம்,கொரியாவில் வேறு பெயர்களில் சிவலிங்க வழிபாடு இருந்து வருகின்றது;

நமது தமிழ்நாட்டில் இருக்கும் 38,000 பழமையான ஆலயங்களில் 27,000 சிவாலயங்கள் ஆகும்;200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளியறை பூஜை அனைத்து ஊர்களிலும்,அனைத்து ஆலயங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது;தற்போது மிகவும் அருகிக் கொண்டிருக்கின்றது;

தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் எல்லாம் பள்ளியறை பூஜை நடைபெறவில்லையோ அந்த ஊர்களில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தம்பதிகள் பெருமளவு குறைந்துவிட்டார்கள்;

சேக்கிழார் மன்றம்,உழவாரப் பணி மன்றங்கள்,திருநாவுக்கரசர் அடியார்கள்,அப்பர் சங்கம்,சுந்தரர் திருப்பணிக் குழு என்ற பெயர்களில் பலவிதமான சிவனடியார்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றார்கள்;அவரவர் ஊர்களில் இருக்கும் சிவாலயங்களில் பள்ளியறை பூஜையைத் துவங்கிட முயற்சி செய்வது அவசரம்;அவசியம்;

பல சிவாலயங்களில் பள்ளியறையே இல்லை;அதை உடனடியாக கட்டிட முயற்சிப்பது அவசியம்;பள்ளியறைப் பூஜைக்கு சிவபாத பூஜை என்று ஒரு பெயர் உண்டு;

பள்ளியறை பூஜை செய்யும் முறை:

இரவுக் கால பூஜை சிவாலயத்தில் நிறைவு ஆனப் பின்னர்,ஈசனுடைய திருப்பாதத்திற்கு அரிய அலங்காரம் செய்ய வேண்டும்;அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லக்கில் வைத்து கோவிலுக்குள் வலம் வரவேண்டும்;முடிவாக,ஒரு தனியறையில் ஊஞ்சல் போன்ற திருப் படுக்கையில் ஈசனையும்,அம்பாளையும் (விஷ்ணு ஆலயத்தில் பெருமாளையும் தாயாரையும்) அமர வைத்து,உரிய தெய்வீகப் பாடல்கள் (சிவாலயம் எனில் பதிகம்,விஷ்ணு ஆலயம் எனில் ப்ரபந்தம்) பாடி தூபம்,தீபம் காட்டி அந்த அறையை மூடிவிடுவதுதான்;

பள்ளியறை பூஜைக்கு ஈசனையும்,அம்பாளையும் பல்லக்கில் வைத்து வலம் வரும் போது,நாதஸ்வரம்,சங்கு,உடுக்கை,பேரிகை,துந்துபி,மத்தளம் மற்றும் திருக்கையிலாய வாத்தியம் என்று அழைக்கப்படும் பஞ்சவாத்தியங்கள் இசைக்க வேண்டும்;

இவைகளை யார் ஒருவர் சம்பளம் வாங்காமல் ஒரு பிறவி முழுவதும் இசைக்கின்றார்களோ,அவர்களே சிவலோகம் என்று அழைக்கப்படும் திருக்கையிலாயத்தில் இசைக்கும் கணங்களாக பொறுப்பேற்கின்றார்கள்;

ஒவ்வொரு தினமும் ஒரு சில நல்ல செயல்களையாவது செய்தோம் என்ற மன நிறைவு உடன் காலதேவனாகிய மஹாகால பைரவப் பெருமானுக்கு நாம் செய்யும் முறையான வழிபாட்டு தின நிறைவுதான் இந்த பள்ளியறை பூஜை!

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும் போது,சிவபுராணம்,பதிகங்கள் பாடி வரவேண்டும்;இதைத் தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம்;

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ,அவர்கள் மறுபிறவியில் பொறியியல் வல்லுநர்களாகவும்,பல மாடிக்கட்டிடங்களுக்குச் சொந்தக் காரர்களாகவும்,பல ஆயிரம்கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள்;

பள்ளியறை பூஜைக்கு பூக்கள்,பூச்சரங்கள்,நிவேதனம் செய்து தருபவர்கள் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கக் காரணமாக இருக்கும்;

பள்ளியறை பூஜைக்கு பசும்பால் தருபவர்களுக்கு அருமையான வாரிசுகள் இப்பிறவியிலேயே கிட்டும்;

பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய்,மின் விளக்கு தானம் செய்பவர்களுக்கு பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியத்தை அடுத்த பிறவியில் பெறுவார்கள்;

ஆயில்யம்,கேட்டை,மூலம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கைத் துணை அமையும்;எனவே,இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;

பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும்,காணாமல் போய் பல ஆண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை அறியவும்,அறிந்த பின்னர் திரும்பி வரவும் மூன்றாண்டுகள் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;அசுபதியும் ஞாயிற்றுக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள்,பால்,நைவேத்தியம் போன்றவைகளை வாங்கித் தரவேண்டும்;


பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கட்டித் தருபவர்கள் மறுபிறவியில் அதிகமான சம்பளம் தரும் வேலையில் சேருவர்;அவர்களது மகனும்,மகளும் மற்றும் பேரன் பேத்திகள் அதிக சம்பளம் தரும் வேலையில் இருப்பார்கள்;குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இப்படிச் செய்தால் மட்டுமே இப்படிப்பட்ட பலன் கிட்டும்;

பள்ளியறை பூஜைக்கு பால்,நைவேத்தியங்கள் செய்து கொடுப்பவர்களும்,பள்ளியறை பூஜை நிறைவடைந்த பின்னர்,ஏழைகளுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகள் இப்பிறவியிலும்,மறுபிறவியிலும் பிறப்பார்கள்;

பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு,அதன் முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டு வந்தால்,சுகப்பிரசவம் ஏற்படும்;நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் அவர்களுக்கு வலியில்லாத பிரசவம் உண்டாகும்;குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும்;இப்படிப்பட்ட சிந்தனை உண்டானால்,அவர்களுக்கு பிரசவ வைராக்கியம் உருவாகுவற்குப் பதிலாக முக்தி வைராக்கியம் உண்டாகும்;

பள்ளியறை பூஜையிலும்,அதன் நிறைவுப்பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவார்கள்;பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும்;


பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக்காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது;

அசுபதி நட்சத்திரமும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் பள்ளியறை பூஜை சேவை செய்து வருவதால் பிரிந்த வாழ்க்கைத் துணை சேர்ந்துவிடுவர்;அல்லது காணாமல் போனவர்கள் வீடு திரும்பிவிடுவர்;
10.2.2019 அன்று மாலை 4.22 முதல் அசுபதி நட்சத்திரம் வர இருக்கின்றது;அன்று இரவு முழுவதும்இருப்பதால்,பள்ளியறை பூஜைக்குச் செல்லலாம்;இதே போல,10.3.2019 அன்றும் இருக்கின்றது;

மிருகசீரிடம் நட்சத்திரமும்,திங்கட்கிழமையும் இணைந்து இரவு 9 மணி வரையிலும் வர வேண்டும்;இந்த நாளில் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;இப்படிக் கலந்து கொள்வதன் மூலமாக,கலந்து கொள்பவர்கள் தமது வாழ்நாளில் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்தில் தெளிவாக சிந்தித்து முடிவு செய்யும் திறனை ஈசன் வழங்குவார்;மேலும்,முக்கியமான வரம் ஒன்றையும் (அவரவரது பூர்வ ஜன்ம புண்ணியத்திற்கு ஏற்றாற்போல) தருவார்;அது அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தின் போது அரிய வரமாக கைகொடுக்கும்;
1.10.2018 அன்று இம்மாதிரியான இணைப்பு வருகின்றது;

ஆயில்யம் நட்சத்திரமும்,செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் பள்ளியறை பூஜையில் சேவை செய்தால் திருமணத்தடைகள் நீங்கிவிடும்;
25.12.2018 செவ்வாய் இரவு 7.48 முதல் ஆயில்யம் வர இருக்கின்றது;22.1.2019 அன்றும் வர இருக்கின்றது;

அஸ்தம் நட்சத்திரமும்,புதன் கிழமையும் இணைந்து வரும் நாளில் பள்ளியறை பூஜையில் சேவை செய்து வந்தால் செய்யும் வேலையில் (அரசுப்பணி,தனியார் வேலை) எல்லா விதமான தடைகளும் நீங்கி உயர் பதவிகளை அடைவர்;

அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் இணைந்து வரும் நாட்களில் பள்ளியறை பூஜையில் சேவைகள் செய்து வந்தால் எல்லாவிதமான சித்திகளும் கைகூடும்;

6.12.2018 அன்று வியாழன்+அனுஷம்+அமாவாசை மூன்றும் சேர்ந்து வர இருக்கின்றது;

உத்திராடம் நட்சத்திரமும் வெள்ளிக்கிழமையும் இணைந்து வரும் நாட்களில் பள்ளியறைபூஜையில் சேவை செய்து வந்தால் பெண்ணுக்கு மாங்கல்ய பலம் வலுவடையும்;கணவனது நோய்கள் தீர்ந்துவிடும்;

29.3.2019 வெள்ளி மதியம் 3.51 முதல் உத்திராடம் நட்சத்திரம் வர இருக்கின்றது;

சதயம் நட்சத்திரமும் சனிக்கிழமையும் சேர்ந்து வரும் போது  பள்ளியறை பூஜையில் சேவை செய்து வந்தால் சாதனை செய்யும் குழந்தை பிறக்கும்;
20.10.2018

இன்றைய கால கட்டத்தில் எந்த பூஜை செய்தால்,என்ன பலன் கிட்டும்? எந்தபரிகாரம் செய்தால் எது கிடைக்கும்? என்ற மனோபாவம் எல்லோரிடமும் வந்துவிட்டது;பொருளாதாரத் தன்னிறைவு எட்டினாலும்,ஆன்மீக விழிப்புணர்ச்சி அடையாத வரையிலும் இந்த மனப்பான்மை தொடரத்தான் செய்யும்;


பலனை எதிர்பார்த்து கோவிலுக்குச் சென்று வழிபாடு,பரிகாரம்,தானம்,பூஜைகள் செய்தால் அதற்கு உரிய பலன் கிடைக்கும்;அதே சமயம்,பிறவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிடும்;

வேண்டத்தக்கது அறிவாய் நீ அருணாச்சலேஸ்வரா!
வேண்டிட முழுவதும் தருவாய் நீ அண்ணாமலையானே!! என்று தினமும் பிரார்த்தனை செய்யப் பழக வேண்டியது நமது கடமைகளில் முதன்மையானது ஆகும்;

தினமும் நாம் சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்று வரும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்வோம்;இப்பிறவிக்கும்,மறுபிறவிக்கும் ஈசன் அருளைப் பெறுவோம்;

சித்தர்களின் தலைவரும்,நமது தமிழ் குருவுமாகிய அகத்திய மகரிஷியின் பேரருளால் இந்த கட்டுரையைத் தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

                       வாழ்க          வளர்க.!

தெரிந்துகொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!19/10/2018வெள்ளி

தெரிந்துகொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!

1.பஞ்ச கன்னியர்
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.

2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.

7.பஞ்சபட்சி
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11.பஞ்சாங்கம்
 வாரம்,திதி, நட்சத்திரம், யோகம், கரணம்.

12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.

17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

20. பஞ்ச பூதங்கள்
 நிலம், நீர்,நெருப்பு,காற்று,  ஆகாயம்

21.பஞ்சபூதஸ்தலங்கள்
காஞ்சிபுரம், திருவானைக்கா, திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம்

22.பஞ்சகிருத்தியங்கள்
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்.

23.பஞ்சாட்சரம்
ந ம சி வ  ய

Thursday, October 11, 2018

நவராத்திரி வழிபாடு 11/10/2018 வியாழன்

🌹 முப்பெரும் தேவியருக்கான முன்னணிவிரதம் 🌹

நவராத்திரி வழிபாடு

நவராத்திரி கல்விக்கும் கலைக்கும் கலாசாரத்திற்கும் விருந்தோம்பலுக்கும் நட்புறவுகளின் நல்லிணக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது நவராத்திரி விழாவாகும்.

மனித குலம் மேம்பட
கல்வியும்
செயலாற்றலும்
செல்வமும்
அவசியமாகிறது.

வீரத்தையும் வெற்றி வாய்ப்புகளையும் வளர்ப்பதற்கு மலை மகளான துர்க்கா தேவி, செல்வத்தையும் சுகங்களையும் வழங்குவதற்கு திருமகளான ஸ்ரீலக்ஷ்மிதேவி, கல்வி கலைகளை அளிப்பதற்கு கலைமகளான ஸ்ரீ சரஸ்வதி தேவி,இவர்களை ஒன்பது நாட்களில் உள்ளம் ஒன்றி வழிபடுவதே நவராத்திரி விரதத்தின் மகத்துவமாகும்.

அமாவாசை திதி முடிந்து பிரதமையில் தான் நவராத்திரி விரதம் ஆரம்பமாகும். பிரதமம் என்றால் பிரதானமானது முதன்மையானது என்று அர்த்தம். பிரதமை என்றால் முதலாம் திதி இந்தப் பிரதமை யிலிருந்து நவராத்திரி பூஜையை ஆரம்பித்து வரிசையாக ஒன்பது நாட்களும் நவராத்திரி விரத பூஜைகளை நடத்தவேண்டும்
நவராத்திரி நாட்களில் பிரதமை - துவிதியை - திருதியை - ஆகிய மூன்று திதிகளும் துர்க்கா தேவிக்கு உரியவை

சிவப்பு நிறம், நீலநிற பூக்கள் உகந்தவை புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் இவை உகந்தவை சுண்டல் - பட்டாணி சுண்டல்செய்து வைத்து விநியோகிக்கலாம்.

சதுர்த்தி - பஞ்சமி - ஷஷ்டி - ஆகிய மூன்று திதிகளும் ஸ்ரீ லக்ஷ்மி தேவிக்கு உரியவை .

செந்தாமரை, செவ்வரளி, ரோஜா, செம்பருத்தி, கதம்ப பூக்கள் உகந்தவை சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம், பாயசம், பஞ்சாமிர்தம் இவை உகந்தவை சுண்டல் - மொச்சை அல்லது கொண்டைக் கடலை சுண்டல் செய்து வைத்து விநியோகிக்கலாம்.

சப்தமி - அஷ்டமி - நவமி - ஆகிய மூன்று திதிகளும் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு உரியவை.

வெண் தாமரை, வெள்ளரளி, முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, சம்பங்கி, தும்பைப்பூக்கள் உகந்தவை வெண் பொங்கல், பால்சாதம், தேங்காய் சாதம், பசும்பால் இவை உகந்தவை சுண்டல் - பச்சைப் பயறு சுண்டல்செய்து வைத்து விநியோகிக்கலாம்.
இந்த ஒன்பது நாட்களும் தொடர்ச்சியாக பூஜை செய்ய இயலாதவர்கள் அஷ்டமி அன்று மட்டும் பூஜித்து முழுப் பலனையும் பெறலாம். அன்று தான் தட்சனை அழிக்க காளி தேவி பிரத்யட்சமான நாளாகும் !

மலைமகள் திருமகள் கலைமகள் ஆகிய முப் பெரும் தேவிகளின் திருவருள் என்றும் எல்லோருக்கும் சிறந்து விளங்கி, சகல நன்மைகளும் மேன்மைகளும் அளிக்க வேண்டி உளமார இறைஞ்சுகிறோம்.🌹

Wednesday, October 10, 2018

நவராத்திரி விரதம் 10/10/2018 புதன்


நவராத்திரி விரதம்

காளையர்க்கு ஓர் இரவு சிவராத்திரி
இளம்கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான நாளாகும். அந்த நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள்.

நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.

முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலட்சுமியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தை யும் கைகொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.

நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.

நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம் என்று தேவி பாகவதம் சத்திய பிரமாணம் செய்கிறது.

குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம். ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள்.

அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.

விரதம் மேற்கொள்வோம்.!
அன்னையின் அருள் பெறுவோம்!!

நன்றி
வணக்கம்
வாழ்கவளமுடன்.

உங்களது நட்சத்திரத்தின் பொது குணம் 10/10/2018 புதன் கிழமை

பிறந்த நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொது குணம் :-

💮1.அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

💮2.பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

💮3.கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதிஅதிகம், பழகுவதில் பண்பாளர்.

💮4.ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

💮5.மிருகசீரிடம்:தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

💮6.திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி,திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

💮7.புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

💮8.பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

💮9.ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

💮10.மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

💮11.பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

💮12...,உத்திரம்:நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்

.💮13..,அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

💮14....சித்திரை:ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

💮15....சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

💮16.,.விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

💮17...அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

💮18...கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்

.💮19...மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

💮20...பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர்,வாக்குவாதத்தில்வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்

.💮21..,உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

💮22....திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

💮23..,அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

💮24....சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

💮25.,..பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

💮26.....உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

💮27....ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.