Sunday, December 1, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் - 14*

*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*

*சந்திரவர்ணன் கதை - 2*

கன்னியாபுரி என்ற நகரத்தை அடைந்த சந்திரவர்ணன் வழிநடைக் களைப்பும் ஆறு மாதமாக உணவு உண்ணாத இளைப்பும் சேர்ந்து கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. அந்நகரின் ஏதோவொரு தெருவில் ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துவிட்டான். மயங்கிவிட்டான் என்றே சொல்லவேண்டும்.

அது தாசி ஒருத்தியின் வீடு. அலங்காரவல்லி என்பது அவள் பெயர். பெயருக்கேற்ற அழகி. சந்திர வர்ணன் வந்தபோது அவள் வீட்டின் கதவைச் சாத்திவிட்டுக் கோவில் பணிக்குச் சென்றிருந்தாள். இரவு தன் தோழியருடன் வீடு திரும்பினாள்.

அந்தணன் ஒருவன் தன் இல்லத் திண்ணையில் பேச்சுமூச்சின்றிப் படுத்திருப்பதைப் பார்த்தாள். அவனைத் தொட்டு எழுப்பினாள். அசைவு இல்லாமல் கிடந்தான். அருகில் உள்ள வைத்தியரை வரச் செய்தாள்.

வந்தவர் அவனைச் சோதித்து விட்டுச் சொன்னார்.

"இந்த அந்தணன் நெடு நாள்களாக உணவும் உறக்கமும் இல்லாமல் இருந்திருக்கிறான். எனவேதான் இவ்வாறு கிடக்கிறான்."

"வைத்தியரே! இவரைக் குணமாக்க என்ன செய்ய வேண்டும்?"

"மூன்று நாள்களுக்கு மூன்று வேளையும் அவனுக்கு அரிசிக் கஞ்சியை வாய் வழியே சிறிது சிறிதாக விட்டு உண்ணச் செய்ய வேண்டும். பிழைத்துவிடுவான்."

அலங்கரவல்லி திண்ணையில் கிடந்தவனை உள்ளே தூக்கிவரச் செய்தாள். வைத்தியர் சொன்னபடி அவன் வாயைத் திறந்து சிறிது சிறிதாகக் கஞ்சியைக் குடிக்கச் செய்தாள்.

சந்திரவர்ணன் சரியாக மூன்று நாள்களுக்குப் பிறகு கண் விழித்தான். அவன் முன்பு ஓர் அழகி நின்றிருந்தாள்.

"பெண்ணே, நீ யார்? நான் எவ்வாறு இங்கு வந்தேன்? எத்தனை நாள்களாக இவ்வாறு உள்ளேன்?"

அலங்காரவல்லி  தன்னைப் பற்றியும் அவனை மூன்று தினங்களாகப் பராமரிப்பதைப் பற்றியும் கூறினாள்.

தான் தாசி வீட்டில் இருப்பதை அறிந்து வெளியே வர முயன்றான். அலங்காரவல்லி அவனைத் தடுத்தாள்.

"அன்பரே, மூன்று நாள்களாக உமக்குப் பணிவிடை செய்துவருகிறேன். அருகிலிருந்து உம்மைக் கவனித்து வந்ததில் எனக்கு உங்களிடம் காதல் வந்து விட்டது. என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்." என்றாள்.

" அலங்காரவல்லி, அந்தணன் ஒருவன் தாசி குலத்தில் பிறந்தவளை எவ்வாறு மணக்க இயலும்? என்னைக் காப்பாற்றியதற்கு என்னால் நன்றி மட்டுமே கூற இயலும். "

"சுவாமி, இவ்விதம் சொல்லாதீர்கள். நீங்கள் இன்றி நானில்லை. நான் தாசி குலத்தைச் சேர்ந்தவள் என்பதைத் தவிர வேறு தடையேதும் உள்ளதா உங்களுக்கு?"

"இல்லை."

" வாருங்கள். அரண்மனைக்குச் செல்வோம். அங்கு இருக்கும் அரசனின் புரோகிதர் நல்ல தீர்ப்பு ஒன்றைச் சொல்வார்."

சந்திரவர்ணன் அதற்கு உடன்பட்டான். இருவரும் அரண்மனைக்குச் சென்றனர்.

No comments:

Post a Comment