Thursday, January 25, 2018

இன்று பீஷ்மாஷ்டமி 25/01/2018 வியாழன்

எருக்க இலையும்.. பீஷ்மரும்..
இன்று பீஷ்மாஷ்டமி
மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்டு விட்டார் பிதாமர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் பெற்றிருந்த வரமே இப்போது அவருக்கு பெரிய கஷ்டத்தை அளித்துக் கொண்டிருந்தது.

உத்தராயணத்தில் உயிர் விடலாம் என்று நினைத்த பீஷ்மர், அர்ச்சுனனால் ஏற்படுத்தப்பட்ட அம்புப் படுக்கையின் மீது படுத்திருந்தார். மேலும் அவரது தாகத்தை தீர்ப்பதற்காக, அர்ச்சுனன் நிலத்தில் அம்பை செலுத்தி கங்கையை வரவழைத்துக் கொடுத்தான்.

இருந்தாலும் காலம் போய்க் கொண்டே இருந்தது. உத்தராயணக் காலம் வந்தும் பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியவில்லை. பாண்டவர்கள், கவுரவர்கள், கிருஷ்ணர் என அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

பீஷ்மருக்கோ தன் உயிர் இன்னும் பிரியாததை நினைத்து வேதனை. அப்போது அங்கு வந்து சேர்ந்தார் வேத வியாசர்.

அவரைப் பார்த்த பீஷ்மர், ‘மகரிஷியே.. என்னுடைய உயிர் ஏன் இன்னும் போகவில்லை. நான் செய்த பாவம் தான் என்ன?’ என்றார்.

அதற்கு வியாசர், ‘பீஷ்மரே! ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் செய்வதுதான் தீமை என்றில்லை. தன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.’

பீஷ்மருக்கு இப்போது புரிந்து விட்டது, தன்னுடைய இந்த வேதனைக்கான காரணம். பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரித்த போது, சபையில் இருந்த அனைவரிடமும் தன்னை காப்பாற்றும்படி மன்றாடி னாள். அங்கு இருந்த அனைவரும் அங்கு ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாதது போல் இருந்தனர். அவர்களில் பீஷ்மரும் ஒருவர். அந்த பாவம் தான் தனக்கான இந்த தண்டனை என்பதை உணர்ந்த பீஷ்மர், ‘இதற்கு என்ன பிராயச்சித்தம்?’ என்று வியாசரிடம் கேட்டார்.

‘பீஷ்மா! ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது. உன்னுடைய பாவம் இப்போது அகன்று விட்டது. என்றாலும், திரவுபதி சபையில் கூக்குரலிட்டு கதறியபோது, கேட்காதது போல் இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், தவறை தட்டிக் கேட்காத வாய், அசாத்திய வலிமை இருந்தும் தினவெடுக்காத உன் தோள்கள், வாளை பயன்படுத்தாத உன் கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் கால்கள், தவறைப் பற்றி யோசிக்காத உன் மூளை இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அதுதான் விதி’ என்றார் வியாசர்.

அதையடுத்து பீஷ்மர், ‘என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் சூரிய பகவான் ஒருவரே. எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்’ என்று துக்கத்தோடு வியாசரை வேண்டினார்.

வியாசர், எருக்க இலை ஒன்றைக் காட்டி, ‘பீஷ்மா! எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் ‘அர்க்க பத்ரம்’. அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள். சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனை த் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்க ளை அலங்கரிக்கிறேன். அதன் மூலம் உன் உடல் வெப்பம் சாந்தியாகும்’ என்றார்.

அதன்பிறகே பீஷ்மர் தியானத்தில் மூழ்கி, ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்.

அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், ‘வருந்தாதே தருமா! ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும்.

ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்’ என்று ஆறுதல் சொன்னார்.

ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்க ளில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறையும் ஏற்பட்டது.


பீஷ்மாசாரியார் நித்திய பிரம்மசாரி. ஆகவே பீஷ்மாஷ்டமி ஆன இன்று தகப்பனார் உள்ளவர்கள்,  இல்லாதவர்கள் எல்லோரும் அவருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி அர்க்யம் விட வேண்டும்.

வையாக்ரபாதி கோத்ராய
ஸாங்க்ருதி ப்ரவராய ச
கங்காபுத்ராய பீஷ்மாய
ஆஜந்ம ப்ரஹ்மசாரிணே
பீஷ்மாய நம: இதமர்க்யம், இதமர்க்யம்,இதமர்க்யம்.

கிருஷ்ணார்ப்பணம்!

Saturday, January 20, 2018

ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்
தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழிதடங்கள்  !!!

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

*1, திங்களூர் (சந்திரன்):*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*காலை 6மணி*

ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம்.

*2, ஆலங்குடி (குரு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 7.30மணி*

ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள்  சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு  8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

காலை 8.30 மணிக்குள்  இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

*3, திருநாகேஸ்வரம் (ராகு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 9.30*

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி  பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க  ஒரு மணி நேரம் ஆகும். பின்னர்  கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு  புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

*4, சூரியனார் கோவில் (சூரியன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 11.00மணி*

நீங்கள்  11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

*5, கஞ்சனூர் (சுக்கிரன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 12.15*

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால்  மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே  12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*மாலை 4மணி*

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை  20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம்.  மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

*7, திருவெண்காடு (புதன்) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 5.15மணி*

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம்  மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 6.15மணி*

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம்.  ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

*9, திருநள்ளாறு (சனி) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*இரவு 8.00மணி*
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால்  8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம்  தரிசிக்கலாம்.

9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம். 🍒

Wednesday, January 10, 2018

யாருக்கு யார் உதவி? 10-01-2018 புதன்

யாருக்கு யார் உதவி?
                      


உலக வாழ்வில் அன்றாடம் நாம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.
நம் பிரச்னைகளுக்கு எப்படியோ
தீர்வும் கண்டு விடுகிறோம்.
         



அப்பிரச்னைகள் முடிவுக்கு வருவதற்குள் நாம் ஒரு வழியாகி விடுகிறோம் அல்லவா?
எப்படா முடியும் என்று அலுத்துக் கொள்வதும் உண்டு.
இது போன்ற சமயங்களில் இத்தீர்வினை ஜாதகரீதியாக அறிந்து கொள்ள வழி உண்டா?
உண்டு எனில் அதனை எப்படி தெரிந்து கொள்வது?
       


குரு   இருக்கும் வீட்டிற்கு  2-ல் எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனை பேர்கள் ஜாதகருக்காக உதவி செய்வார்கள்.

குரு  இருக்கும் வீட்டிற்கு  12-ல் எத்தனை கிரகங்கள் உள்ளதோ ஜாதகர் அவர்களுக்கு உதவி செய்வார்.

காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
என்ற வள்ளுவர் வாக்கும் இதனால் அன்றோ!




 நன்றே செய்வோம்!  பிறர்க்கு ஈந்து வாழ்வோம்!