Wednesday, July 12, 2023

தாய்க்கு 16 பிண்டங்கள்

 ஸ்ரார்தம் ( மாத்ரு ஷோடஸி)

இன்று என் தாயார் சிரார்தம் செய்தேன்

கடந்த 63 ஆண்டுகளாக என்னை பெற்ற தாய்க்கு சிரார்தம் செய்து வருகிறேன்


கண்களில் நீர் மல்க எழுதிகிறேன். 


கயாவில் தாய்க்கு 16 பிண்டங்கள் வைக்க வேண்டும்


கீழே படிக்கவும்


இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். 


இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். 


        16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் "மாத்ரு ஷோடஸி". 


1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?


2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.


3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே. 


4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக -- ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன். 


5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் |


''ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ'' .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''


6. ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'


7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..\


8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \


9. ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம். 

.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ''கடிக்காதேடா..'' . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா


11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.'' காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.'


12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.


13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா. 


14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது. 


15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற''

தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே. 


16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.


மஹா பூதாந்தரங்கஸ்தோ

மஹா மாயா மயஸ்ததா

ஸர்வ பூதாத்மகச்சைவ

தஸ்மை ஸர்வாத்மனே நமஹ


( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )

புராணத்தில் ராகு- கேது பற்றி வரும் செய்திகளை தெரிந்து கொள்வோம்


புராணத்தில் ராகு- கேது பற்றி வரும் செய்திகளை தெரிந்து கொள்வோம்: - 

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்கள்.

திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்துகொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள். மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார் கள். அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்ப தாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சர்வேஸ்வரன் அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும் பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார். அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக்கூடாது என்பதற்காக, கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில் விஷம் தங்கிவிட்டது. அதனால் அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது. அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு. நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம் உண்டு.

பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும் தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.

அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டு மென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களை யும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.

யார் இந்த சொர்ணபானு? சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.

துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம்.


 இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது பகவான் என்று பெயர் பெற்றார். மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.

இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர். இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப்படவில்லை.

இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனவோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்து விளங்குகின்றனவோ அந்தந்த ராசிநாதன் அல்லது கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் கூற வேண்டும்.

என்று ஜோதிட ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன....








Tuesday, July 11, 2023

குலதெய்வம் - முழுமையாக ஓர் அலசல்

 எனது குல தெய்வத்தை வணங்குகின்றேன் , எல்லோரும் அவர்கள் குடும்ப குலதெய்வம் பெயர் சொல்லி துணை வேண்டும் என்று பதிவிட்டால்உங்கள் மூலம்  அந்த குல தெய்வங்கள் ஆசிகளையு,ம் பெற விரும்புகின்றேன் குலதெய்வம் தெரியாதவர்கள் எனது குலதெய்வமே என்னை காப்பாற்று எனக்கு துணையாக இருந்து காப்பாற்று என்று பதிவிடுங்கள் நன்றி

இளங்குடி பூர்ண புஷ்கலாம்பா சமேத பகற் சால மூர்த்தி அய்யனார் துணை


குல தெய்வம் - முழுமையாக ஓர் அலசல்...!

33 கோடி தேவர்களில் குலதெய்வம் யார்

என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எங்காவது ஒரு ஆலயத்துக்குச் சென்றால் அங்கு ஏதாவது விவரம் அறிந்த பண்டிதர் இருந்தால் அவர்களிடம் தெய்வ சம்மந்தமாக ஏதாவது கேட்டு தெரிந்து கொள்வது உண்டு. என்னிடம் யாராவது மாட்டிக் கொண்டு விட்டால் லேசில் விடுவது இல்லை. கேட்டு முடித்தப் பின் தட்சணையாக ஏதாவது தருவதை மறப்பதில்லை. இந்த முறையும் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்டார். ஒரு சமயம் ஒரு கிராமத்தில் இருந்த ஆலயத்துக்கு சென்ற இருந்தபோது அங்கு ஒரு வயதான பண்டிதர் போன்றவர் இருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது குல தெய்வத்தைப் பற்றிய சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டேன். அவர் அதற்கு ஒரு பிரசங்கமே கொடுத்து விட்டார். அதைக் கேட்டபோது மிக அற்புதமாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் ஆலயத்தை சுற்றி விட்டு வந்தபோது அவரை அங்கு காணவில்லை. நான் தவறு செய்துவிட்டதாகத் தோன்றியது. அவர் பெயரையோ, எங்கு இருக்கின்றார் என்பதையோ கேட்டுக் கொள்ளவில்லை. அங்கும் இங்கும் தேடியும் அவரைக் காணவில்லை. எனக்காகவே அவர் அங்கு வந்திருந்தது போல இருந்த அவர் யார்? தெரியவில்லை, ஒரு கனவு போல வந்தார், சென்றார் என ஆகிவிட்டது. ஆனால் குலதெய்வம் பற்றி அவர் கொடுத்த பிரசங்க விளக்கமே சரியானதாக இருந்தது . பண்டிதர் கொடுத்த தகவல் இது:

குல தெய்வம் யார் எனத் தெரியாதவர்கள்

என்ன செய்ய வேண்டும்?

'' முன் காலத்தில் சில கிராமப்புறங்களில் இருந்த பிராமணர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் குளித்து விட்டு பூமியில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து மஞ்சள் குங்குமம் இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது என்பது தெரியாததினால் உருவமற்ற அதை ஒரு பீடத்தில் (அந்த காலத்தில் மரப்பலகைகள் நிறையக் கிடைக்கும் என்பதினால்) சந்தனத்தினால் ஒரு கட்டம் போட்டு அதில் வீபுதி மற்றும் மஞ்சள் குங்குமத்தையும் தூவி களி மண்ணால் செய்த பிள்ளையார் பிடியைப் போன்ற அந்த குலதெய்வ களிமண் தெய்வத்தை அதன் மீது வைத்து அதையே தமது குல தெய்வமாக எண்ணி பூஜை செய்வார்கள். வீபுதியையும், மஞ்சள் மற்றும் குங்குமத்தை தூவுவது எதற்காக என்றால் குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால் ஆண், பெண் என்ற இருவருக்கும் பொருந்தும் வகையில் ஆணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் வீபுதியையும், பெண்ணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் குங்குமத்தையும் இடுவதான ஐதீகம் கொண்டு அதை செய்வார்கள் . பூஜை முடிந்ததும் பூஜை அறையில் அந்த களிமண் பிடியை தமது குல தெய்வமாக கருதிக் கொண்டு ஸ்வாமி பீடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக உடையாமல் வைத்து விடுவார்கள். அதையே தமது குல தெய்வமாக வணங்கி வரும்போது ஒரு கட்டத்தில் நிச்சயமாக அவர்களுடைய குலதெய்வம் அவர்கள் கனவிலோ அல்லது யார் மூலமாகவோ வந்து அவர்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். இது சத்தியமான உண்மையாகவே இருந்தது''

எப்படி களிமண் உருவை படைத்து அதை பூஜித்தார்கள் என அவர் கொடுத்த விவரத்தை மேலே உள்ள படத்தில் கொடுத்து உள்ளேன் . அவர் மேலும் கூறுகையில் 'ஒரு தவறை செய்யக்கூடாது' என எச்சரித்தார்.

''பூமியில் இருந்து எடுத்த களி மண்தானே என அதை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. எப்போது அந்த மண் பிடியை குல தெய்வத்தின் உருவம் என்று கருதி பூஜிப்போமோ அப்போதே அதில் நம்மை அறியாமல் நம்முடைய குல தெய்வங்கள் வந்து குடியேறும். ஆகவே அதை தமது குல தெய்வம் அடையாளம் தெரியும் வரை பத்திரமாக, உடையாமல் பாதுகாத்து வர வேண்டும். தேவை என்றால் தெய்வங்களை வைத்து உள்ள இடத்திலோ, பூஜை அறையிலோ ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியிலாவது வைத்து அதை பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் அதற்கு தினமும் ஒரு பூவாவது, அது முடியவில்லை என்றால் அதன் பீடத்தில் சிறிது குங்குமத்தையாவது தூவி ' குல தெய்வமே, எனக்கு உன்னை அடையாளம் காட்டுவாயா' என பிரார்த்தனை செய்து வணங்கி வர வேண்டும். வேறு எந்த பூஜையும் செய்யத் தேவை இல்லை. ஆனால் நிச்சயமாக அவரவர் பிராப்தம் போல எப்போது அவர்களுக்கு தன்னைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமோ அப்போது அவர்களுக்கு குல தெய்வம் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் என்பதில் சற்றும் சந்தேகம் கிடையாது. எப்போது அவர்கள் தமது குல தெய்வத்தை அடையாளம் கண்டு கொள்கின்றார்களோ அதன் பின் அவர்கள் எப்போது அந்த ஆலயத்துக்கு செல்வார்களோ அப்போது தமது குல தெய்வமாக வணங்கி வந்த மண் பொம்மையை எடுத்துக் கொண்டு அந்த ஆலயத்தில் குல தெய்வத்தை வணங்கியப் பின் ஆலய ஸ்தல விருஷத்தின் கீழ் அல்லது ஆலயத்திலேயே ஏதாவது ஒரு மூலையில் அந்த பொம்மையை வைத்துவிட்டு வருவார்கள். அல்லது ஆலயத்தில் குளம் இருந்தால் அந்த நீரில் அதைப் போட்டு விட்டு வருவார்கள்'' . என்று கூறினார். குல தெய்வம் என்பது எத்தனை ஜென்மங்களுக்குப் பொருந்தும், வம்சக் கணக்கு என்பது என்ன என்ற கேள்வி எழுந்தபோது அவர் கூறிய கீழே தந்துள்ள விவரங்கள் ஆச்சர்யமாக இருந்தன.

குல தெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு

ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?

சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7x7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம்.

அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது . அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

வம்சக் கணக்கு என்பது என்ன?

வம்சம் என்பது எப்படி கணக்கிடப்படுகின்றது? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா? அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.

மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.

பலருக்கு குல தெய்வம் யார் என்பது

ஏன் தெரியாமல் உள்ளது?

இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். அதில் தமது காணிக்கைகளை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வபோது தாம் போக முடியாவிடிலும் குடும்பத்தில் யார் அங்கு செல்கிறார்களோ அவர்களிடம் அந்த காணிக்கைப் பணத்தை தந்து உண்டியலில் சேர்த்து விடுமாறு கூறுவார்கள். தமது பிள்ளைகள் வெளியூருக்குப் போகும்போது அவர்களுக்கு குல தெய்வம் யார் என்பதைக் கூறி குல தெய்வத்தின் படத்தையும் தருவார்கள். அது மட்டும் அல்ல எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்கும்போது, முதல் பிரார்த்தனை குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகள் துவங்கும்.

ஆனால் காலபோக்கில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களினால் வெளியூர் செல்லும் பிள்ளைகள் குல தெய்வம் என்ற கருத்தை மறந்து விட்டார்கள். தங்கும் இடமே என்ன என்பது தெரியாதபோது குல தெய்வத்தின் நினைவு அவர்களுக்கு எப்படி இருக்கும். குல தெய்வத்தின் படம் கூட அவர்களிடம் இருக்காது. திருமணம் ஆகி வேலைக்கு சென்றதும் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே செல்வதும், வெளியூர் செல்வதும் பழக்கமாகி விட்டது. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு மொட்டை அடிக்கும்போது மட்டுமே குல தெய்வத்தை தேடுவார்கள். அது தெரியவில்லை என்றால் அதுவும் ஒரு சடங்கு போல பழனி, திருப்பதி அல்லது வைதீஸ்வரன் ஆலயம் என எங்காவது சென்று மொட்டைப் போட்டு விட்டு வந்து விடுவார்கள்.

அது மட்டும் அல்லாமல் காலப் போக்கில் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவு தேட புதுப் புது சாமியார், சன்யாசிகள் மற்றும் தெய்வப் பிறவிகள் என ஓடுகிறார்கள். அவர்கள் கூறுவதை செய்வார்கள். ஆனால் தம்முடைய குல தெய்வத்தை நினைக்க மாட்டார்கள். அதற்கு மேலும் அந்த சாது, சன்யாச, தெய்வப் பிறவிகளும் முதலில் உங்கள் குல தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற நியதியை அறிவுறுத்த மாட்டார்கள். அப்படி செய்தால் அவர்கள் என்ன ஆவது ?

இப்படி எல்லாம் இருப்பதினால்தான் குல தெய்வத்தை மறந்து விடுபவர்களும், குலதெய்வ சிந்தனை இல்லாமல் இருப்பவர்களும், அப்போது தம்மையே அறியாமல் ஒரு சடங்கு போல வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகளையும் கொண்டாடும்போது தாம் குல தெய்வத்தை மறந்து விட்டோமே என்ற எண்ணம் இருப்பது இல்லை. அப்படி செய்யும் தவறு தெரிவது இல்லை. என்னதான் எந்த ஆலயத்தில் சென்று சடங்கை செய்தாலும் குல தெய்வத்தை மறப்பது பெற்றோர்களையே மறப்பது போன்றதே என்ற தவறு தெரிவது இல்லை. அதனால் அவர்கள் குல தெய்வத்தின் சாபங்களுக்கு ஆளாகி விட அது அவர்கள் வம்சத்தை பல வகைகளிலும் பாதிக்கின்றது. அந்த குல தெய்வ சாபம் அந்த குடும்பத்தினருக்கு தொடரும்.

📷

ReplyForward

Sunday, July 9, 2023

குங்குமத்தின் மகிமைகள்;


 குங்குமத்தின் மகிமைகள்;

------------------------------------

இந்து சமயத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுவது குங்குமம் ஆகும்.இந்த குங்கும பொடி மதம் சார்ந்தது அல்ல நமக்கு பல வகைகளிலும் நன்மையை கொடுக்ககூடிய மிகப்பெரிய கிருமி நாசினி ஆகும்.இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லதாகும்.அதேபோல் குங்குமம் வைத்த பெண்களை யாரும் ஹிப்னாட்டிஸம்,வசியம் செய்ய முடியாது.அதை முறியடிக்கும் சக்தி குங்குமத்திற்கு உண்டு.

Friday, July 7, 2023

12 ராசிகளும் 9 கோள்களும் கூறுவது



 👩‍❤️‍👨👩‍❤️‍👩👩‍❤️‍👨👩‍❤️‍👩👩‍❤️‍👨👩‍❤️‍👩👩‍❤️‍👨👩‍❤️‍👩


*நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும்,* *வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில்,*

*கஷ்டப் படுவதற்கு என்ன காரணம்,*

*என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால்,* நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள்!

இது கூடவா,

ஒரு காரணம் என்ற அளவிற்கு உங்களையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்,

அந்த காரணம் என்ன?

தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன?

என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

*எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் #அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ,*

அவர்களுக்கு #நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் *கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.*

இப்படியாக சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.

*சாட்சியோடு சொன்னா நம்புவீங்களானு பாப்போம்?*

எந்த கிரகத்துக்குரிய சொந்த பந்தம் எது என்பதையும் பார்த்துவிடலாம்.

*உங்களுடைய #அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால்,*

அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,

உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.

வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது.

ஏனென்றால், #அப்பா ஸ்தானத்தை குறிப்பது #சூரியன்.*

*உங்களுடைய #அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை என்றால்,*

அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால்,

அவர்களை அவமானப்படுத்தி பேசினால்,

கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும்.

அறிவாற்றல் மங்கிப் போகும்.

குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள்.

மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், *#அம்மா ஸ்தானத்தை குறிப்பது #சந்திரபகவான்.*

*நீங்கள் கணவனாக இருந்தால்,*

ங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு தான் நடத்த வேண்டும்.

மனைவிக்கு மரியாதை இல்லை என்றால்,

உங்கள் வீட்டில் மகாலட்சுமி இல்லை.

வீடு, மனை, வாகனம், சொத்துபத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால், மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.

*#மனைவி இடத்தை குறிப்பது #சுக்கிரன்.*

*நீங்கள் மனைவியாக இருந்தால்* உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும். உங்கள் #கணவர் இடத்தை குறிப்பது #குரு.

*உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள், கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.*

*#தாய்மாமன் ஸ்தானத்தை குறிப்பவர் #புதன்* தாய்மாமன் மட்டுமல்ல,

#அத்தை ஸ்தானத்தையும் குறிப்பதும் புதன் பகவான்.

உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், தாய்மாமன்,

அத்தை போன்ற சொந்த பந்தங்களை #மதிப்போடு நடத்த வேண்டும்.

*#சகோதர சகோதரிகளை இழிவாகப் பேசினால்,* #செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது.

உங்களால் ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி, கட்டாயம் சேர்க்க முடியாத. வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும்.

#இது உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.

கணவனாக இருந்தால், மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும்.

மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.)#

*அடுத்ததாக #பாட்டிமார்களும்_தாத்தாக்களும்.*

இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது.

அதாவது, *#ராகு_கேதுவிற்கு உரியவர்கள் இவர்கள்*.

ஆகவே, இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும்.

முதியவர்களை கஷ்டப்படுத்தினால், நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.

*இப்போதாவது நம்புவீர்களா கஷ்டம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று!*

ஆக மொத்தம் உறவினர்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும்

சண்டை போட்டாலும் ஓருவருக்கொருவர்

பார்க்காமல் பேசாமல் இருப்பதை

தவிர்த்து அவர்களுடன் #அன்புடன்

பழகி அவர்களையும் #சந்தோஷப்படுத்தி

அதன்மூலம் நாமும் #சந்தோஷமாய்_வாழ்வோம்.

நவகிரகங்களும் சந்தோஷப்பட்டு நம் தோஷங்களை களைந்து நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள்..


*ஆக 12 கட்டங்களும் 9 கிரஹங்களும் நம்மை சுற்றி நம் வீட்டில்தான் என புரிந்து நடந்தால் வாழ்க்கை சுபீக்ஷமாக இருக்கும் நிச்சயமாய்*..!!

Wednesday, July 5, 2023

🌷!! பிள்ளையார் சுழி !!🌷

 🌷!! பிள்ளையார் சுழி !!🌷


🔥நாம் ஏன் பிள்ளையார் சுழி { “உ’ எனும் சுழி } போடுகிறோம் தெரியுமா..?🔥


🌻புதுக்கணக்கு எழுதும் போதோ, திருமண அழைப்பிதழ்கள் அச்சிடும் போதோ, கடிதம் எழுதும் போதோ, மளிகை சாமான் லிஸ்ட் போட்டாலும் கூட, பிள்ளையார் சுழியான, “உ’ போட்டுத் துவங்குகிறோம். 🌻


எதற்காக இந்தச் சுழியை இட வேண்டும்… 


இந்த ஒற்றை எழுத்துக்குள், அப்படி என்ன மகிமை ஒளிந்து கிடக்கிறது?


“சுழி’ என்றால், “வளைவு!’ “வக்ரம்’ என்றும் சொல்வர். 


பிள்ளையாரின் தும்பிக்கை நுனியைப் பார்த்தால், வளைந்து சுருண்டிருக்கும். 


இதனால், அவரை, “வக்ரதுண்டர்’ என்றும் அழைப்பதுண்டு. 


பிள்ளையார் சுழியை, “உ’ என எழுதும் போது, முதலில் ஒரு சிறு வட்டத்தில் துவங்குகிறது; 


வட்டத்திற்கு முடிவு கிடையாது. 


அதன் மேல் ஒரு பென்சிலை வைத்து வரைந்து கொண்டே இருந்தால் முடிவே இராது; 


விநாயகரும் அப்படித் தான். 


அவரை அறிந்து கொள்வது என்பது பிரம்மப்பிரயத்தனம். இன்னும் ஒன்றும் சொல்வர்… 


வட்டம் என்பது இந்தப் பிரபஞ்சம். 


இதற்குள் பலவித உலகங்களும், வான மண்டலமும் அடங்கியுள்ளன. 


அதாவது, விநாயகப் பெருமானுக்குள் சர்வலோகமும் அடக்கம். அவரது பெருவயிறும் அதையே தான் காட்டுகிறது. 


அந்த வயிற்றுக்குள் அவர் சர்வலோகத்தையும் அடக்கியுள்ளார் என்றும் வியாக்கியானம் செய்வதுண்டு.


“உ’ எனும் சுழியில் வட்டத்திற்குப் பிறகு, ஒரு நேர்கோடு நீள்கிறது.


இதை “நேர்மை’ எனப் பொருள் கொள்ளலாம்.


“வளைந்தும் கொடு, அதே சமயம் நேர்மையை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதே…’ 


என்ற அளப்பரிய தத்துவத்தை இந்த சுழி கொண்டுள்ளது. 


அது மட்டுமல்ல, இந்த உலகத்தை எடுத்துக் கொள்வோம்… அது, வட்ட வடிவில் இருக்கிறது. 


மேஜையில் வைக்கும் உலக உருண்டையை ஒரு நேரான அச்சில் பொருத்தியிருக்கின்றனர். 


நிஜ உலகம் சுற்றுவதற்கு அச்சு இல்லை என்று அறிவியல் சொன்னாலும், நேரான நிலையிலுள்ள அச்சு, நம் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தியின் வடிவில் இருக்க வேண்டும். 


எனவே, வட்டமான இந்த உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும், பிள்ளையார் சுழியிலுள்ள நேர்கோடு போல, நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்று இந்தச்சுழி நமக்கு அறிவுறுத்துகிறது.


ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவங்கும் போது, “உ’ என மேலே எழுதி கீழே, “லாபம்’ என எழுதுவர்; 


அதாவது, “இதில் கிடைக்கப் போகும் லாபம், நேர்வழியிலானதாக இருக்கட்டும்…’ என்பதே இதற்குப் பொருள்....!


ஓம் விக்ன  விநாயகா போற்றி..!🙏🙏


🔥🌷ஓம்நமசிவாய 🌷🔥

இன்று 5/7/2023 வியாழக்கிழமை ஆனி மாத குருவார சங்கடஹர சதுர்த்தி, விரதம் முறைகள் மற்றும் பலன்கள்.*


 *இன்று 5/7/2023 வியாழக்கிழமை ஆனி மாத குருவார சங்கடஹர சதுர்த்தி, விரதம் முறைகள் மற்றும் பலன்கள்.*


“ஓம்” எனும் பிரணவ மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த மந்திரத்தை தொடர்ந்து துதிப்பவர்களுக்கு தீமைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படுவது பிரபஞ்ச விதியாகும். இந்த ஓம்கார மந்திரத்தின் உருவம் கொண்டவர் விநாயக பெருமான் ஆவார். அவரை துதிப்பவர்களுக்கு நன்மைகள் மட்டுமே ஏற்படும். வணங்குபவர்களுக்கு வளங்களை தரும் விநாயக பெருமானை வணங்கும் ஒரு சிறப்புக்குரிய நாள் தான் “சங்கடஹர சதுர்த்தி”. அந்நாளில் நாம் “சங்கடஹர சதுர்த்தி விரதம்” எப்படி அனுஷ்டிப்பது குறித்தும், அதனால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.


ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வருவது தான் சங்கடஹர சதுர்த்தி தினமாகும். ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வதை தொடங்க வேண்டும். இதிலிருந்து மாதந்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து 11 சங்கடஹர சதுர்த்தி தின விரதம் அனுஷ்டித்து சதுர்த்தி விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 


சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் சென்று, அங்கிருக்கும் பிள்ளையார் சந்நிதிக்கு சென்று, அச்சந்நிதியை 11 முறை வலம் வந்து வழிபட வேண்டும். பின்பு விநாயகருக்கு அறுகம்புல் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து வழிபட்ட பின்பு நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.


வீட்டுக்கு வந்ததும், ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, உங்கள் sவீட்டில் இருக்கும் பசுமாட்டிற்கோ அல்லது வெளியில் திரியும் ஏதேனும் ஒரு பசுமாட்டிற்கோ உணவாக கொடுக்க வேண்டும். ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி விரத தினத்தன்றும் பசுமாட்டிற்கு உணவு கொடுப்பதால் விரதத்திற்கு பலன் அதிகரிக்கும். 

பின்பு விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை, இனிப்பு, சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், சுண்டல் என்று பலவிதமான உணவு பொருட்களை விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து, விநாயகருக்குப் பிடித்த வன்னி இலைகளால் விநாயகரை அர்ச்சித்து, விநாயகருக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் கூறி வழிபட வேண்டும்.


இந்த சதுர்த்தி விரத தினத்தன்று உணவேதும் அருந்தாமல் இருப்பது சிறப்பு. அது முடியாவிட்டால் பால், பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். mமாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் நடக்கும் சங்கடஹர பூஜையின் போது, விநாயகரின் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும் பாலை வழங்க வேண்டும். பின்பு விநாயகருக்கு நடக்கும் அபிஷேகங்களையும், பூஜையையும் கண்குளிர கண்டு வணங்க வேண்டும்.


வீடு திரும்பியதும் பூஜையறையில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை, படத்தை வணங்கி, அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்தியங்கள் பிரசாதமாக எடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முடிக்க வேண்டும். 


ஓவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.